Saturday, 2 July 2011
கோவையில் நாளை நடிகர் கார்த்தி திருமணம்: நடிகர் - நடிகைகள் உறவினர்கள் குவிந்தனர்.
Saturday, July 02, 2011
நடிகர் கார்த்தி திருமணம் கோவையில் நாளை கோலாகலமாக நடைபெறுகிறது. திருமணத்தில் கலந்து கொள்ள நடிகர்- நடிகைகள், உறவினர்கள் கோவையில் குவிந்த வண்ணம் உள்ளனர். நடிகர் சிவகுமாரின் இளைய மகன் கார்த்தி-ரஞ்சனி திருமணம் கோவை கொடிசியா ஹாலில் நாளை அதிகாலை 5-45 மணிக்கு நடைபெறுகிறது.
திருமணம் நடைபெறும் கொடிசியா அரங்கம் இந்திரலோக மாடலில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருமணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. நடிகர் சிவகுமார், சூர்யா, ஜோதிகா, கார்த்தி ஆகியோர் நேற்று முன்தினம் கோவைக்கு வந்து விட்டனர். சிவகுமாரின் சொந்த வீடு கோவையை அடுத்த சூலூர் அருகேயுள்ள காசிகவுண்டன்புதூரில் உள்ளது. சிவகுமார் உள்பட அனைவரும் நேற்று மதியம் 12 மணி அளவில் காசிகவுண்டன்புதூர் வந்தனர்.
அதைத்தொடர்ந்து திருமண சடங்குகள் தொடங்கியது. முதலில் வீட்டில் சாமி கும்பிட்டனர். பின்னர் வீட்டின் அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். இதில் சிவகுமாரின் உறவினர்கள், ஊர்க்காரர்கள் என திரளானோர் பங்கேற்றனர். விநாயகரை தரிசித்ததும் கார்த்தி உள்பட அனைவரும் திருமணம் நடைபெறும் கொடிசியா அரங்கத்துக்கு கிளம்பி வந்தனர்.
திருமணத்தின் முதல் நாள் நிகழ்ச்சிகள் இன்று மதியம் தொடங்கியது. பட்டினி சாத விருந்து என்று அழைக்கப்படும் இந்த விருந்தில் மணமகன் கார்த்தியுடன் அவரது உறவினர்கள் கலந்து கொண்டனர். மாலை 6 மணிக்கு முகூர்த்தக்கால் நடப்படுகிறது. இரவு 7 மணிக்கு வரவேற்பு விருந்தும், 9 மணிக்கு இணை சீர் விருந்தும் நடைபெறுகிறது. நாளை (ஞாயிறு) அதிகாலை 5-45 மணிக்கு கார்த்தி- ரஞ்சனி திருமணம் நடைபெறுகிறது. திருமணத்தில் உறவினர்கள், நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்கள்.
முக்கிய பிரமுகர்கள் மற்றும் உறவினர்கள் தங்குவதற்காக கோவையில் உள்ள லாட்ஜூகளில் 600 அறைகள் முன் பதிவு செய்யப்பட்டிருந்தது. இன்று காலை முதலே உறவினர்கள் கோவைக்கு வந்து குவிந்து கொண்டிருக்கிறார்கள். நடிகர்கள்-நடிகைகளும் கோவையில் குவிந்த வண்ணம் உள்ளனர். கார்த்தியின் திருமணத்தை வாழ்த்தி கோவை மற்றும் காசிகவுண்டன் புதூரில் வாழ்த்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.