

தூத்துக்குடி, மதுரை சம்பவம் என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்திருக்கும் ஹரிகுமார், மூன்றாவது முறையாக போடிநாயக்கனூர் கணேசன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை அறிமுக டைரக்டர் ஓ.ஞானம் இயக்கியிருக்கிறார்.
புதிய படம் பற்றி நடிகர் ஹரிக்குமார் அளித்துள்ள பேட்டியில், தனது கடந்தகால வாழ்க்கையை நினைவு கூர்ந்தார். அவர் கூறுகையில், சினிமாவுல எந்த பின்னணியும் இல்லாமல் குரூப் டான்சராக வாழ்க்கையை ஆரம்பித்து, டான்ஸ் மாஸ்டர் ஆகி, இப்போது ஹீரோ, தாயாரிப்பாளர் என்று உங்க முன்னாடி இருக்கிறேன். இதற்கு எனது உழைப்புதான் காரணம். நான் நடிகனாக வேண்டும் என்பதற்காகத்தான் தயாரிப்பாளாரனேன். என்னோட படங்களுக்கு மக்கள் கொடுக்கிற ஆதரவுதான் என்னை மீண்டும் மீண்டும் இது போன்ற படங்கள் பண்ண தூண்டுது.
எனது படங்கள் தொடர்ந்து ஊர் பெயர்களை தலைப்பாக வைத்து வருவதைப் பற்றித்தான் அனைவரும் கேட்கிறார்கள். எனது முந்தைய படங்களின் வெற்றி சென்டிமெண்டாக இருந்தாலும், கதைக்கு ஏற்றதுபோலத்தான் தலைப்பு அமைகிறது. இந்த படத்தின் கதைகளம் போடிநாயக்கனூர், அதனால்தான் இந்த தலைப்பை வைத்தோம். முழுக்க முழுக்க போடிநாயக்கனூரில் தான் இந்த படத்தை படமாக்கியிருக்கிறோம்.
இதுவரை கேமரா வைக்காத இடங்களில் கூட இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறோம். தமிழ் சினிமா போகாத சில லொக்கேஷன்களை கண்டுபிடித்து படம்பிடித்திருக்கிறோம். இந்த படத்தில் ஒரு மீன் பிடி திருவிழா காட்சியை படம்பிடித்திருக்கிறோம். அதில் கிட்டதட்ட ஐந்தாயிரம் பேர் ஏரியில் மூழ்குவார்கள் அப்படி பட்ட தண்ணியில் ஐந்து முறை கதாநாயகி அருந்ததி மூழ்கினார். இப்படி படம் முழுக்கவே அவர் நல்ல ஒத்துழைப்பை கொடுத்தார், என்று கூறினார்.