விக்ரமுடன் நடித்திருக்கும் தெய்வதிருமகள் பட ரீலிசுக்காக காத்திருக்கிறேன், என்று நடிகை அமலா பால் கூறியிருக்கிறார். மைனா என்ற ஒரே படத்தின் மூலம் ஹிட் நாயகியானவர் நடிகை அமலா பால். அதற்கு பிறகு பெயர் சொல்லும்படியான படம் எதுவும் இல்லையென்றாலும், தற்போது விக்ரமுடன் தெய்வ திருமகள் படத்தில் நடித்திருக்கிறார். இதுதவிர வேட்டை படத்தில் ஆர்யா ஜோடியாகவும், முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில் அதர்வா ஜோடியாகவும் நடித்து வருகிறார்.
வேறு புதிய படங்கள் எதிலும் கமிட் ஆகாமல் இருக்கும் அமலா பால் அதற்கு சொல்லும் காரணம், தெய்வ திருமகள்தான். விக்ரம் படத்தில் நடித்தது புது அனுபவம். அந்த படத்தின் கதை என்னை ரொம்பவே கவர்ந்தது. நிச்சயம் தெய்வ திருமகள் வெற்றிப்படம்தான். அதில் நானும் இருக்கிறேன் என்பதே பெருமையான விஷயமாக கருதுகிறேன். எனக்கு அது பெரிய படம். இந்த பட ரீலிசுக்காகவே நான் காத்திருக்கிறேன். சில படங்களில் நடித்தாலும் பெயர் சொல்லும்படி எனது கேரக்டரும் கதையும் அமைய வேண்டும் என விரும்புகிறேன். அதனால்தான் புதிய படங்களை ஒப்புக் கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது, என்கிறார் அமலா பால்.