Wednesday, 6 July 2011
தமிழில் பெயர் சூட்டப்படும் திரைப்படங்களுக்கு வரி விலக்கு ரத்து?
Wednesday, July 06, 2011
தமிழில் பெயர் சூட்டப்படும் திரைப்படங்களுக்கு வரி விலக்கு ரத்தாகிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில் இந்த வரிச்சலுகை அமல் படுத்தப்பட்டது. 2001 முதல் 2006 வரை அ.தி.மு.க.ஆட்சியின் போது தியேட்டர்களுக்கு 25 சத வீதம் கேளிக்கை வரி விதிக்கப்பட்டது. தி.மு.க. ஆட்சியில் அது 15 சதவீத மாக குறைக்கப்பட்டது. அத்துடன் தமிழில் பெயர் சூட்டப்படும் படங்களுக்கும் முழு கேளிக்கை வரி விலக்கும் அளிக்கப்பட்டது.
அரசின் இந்த அறிவிப்பால் நிறைய படங்களுக்கு பெயர்கள் சூட்டப்பட்டன. ஜெயம் ரவி நடித்த சம்திங் சம்திங் என்ற பெயரில் தயாரான படம் உனக்கும் எனக்கும் என மாறியது. ரஜினி நடித்த ரோபோ படம் எந்திரன் என மாற்றப்பட்டது. கேளிக்கை வரி விலக்கு பெற தயாரிப்பாளர்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு தங்களின் பட தலைப்பு தமிழில் உள்ளது என்பதை குறிப்பிட்டு கடிதம் அனுப்ப வேண்டும். அக் கடிதத்தை தயாரிப்பாளர் சங்கம் ஆய்வு செய்து பரிந்துரை கடித்தத்தோடு வணிக வரித்துறைக்கு அனுப்பும். அங்குள்ள குழு தலைப்பை ஆராய்ந்து தமிழ் தலைப்பு என்று உறுதி செய்த பின் வரி விலக்கு அளிப்பதற்கான உத்தரவை வழங்கும்.
ஆனால் கடந்த 1 1/2 மாத மாக வணிக வரித்துறை வரிச்சலுகை கடிதம் எதுவும் வழங்கவில்லை. கடைசியாக பாசக்கார நண்பர்கள் படம் மட்டும் வரிச்சலுகை பெற்றது. அதன் பிறகு வெளியான எத்தன் உள்பட பல படங்களுக்கு வரி விலக்கு கிடைக்கவில்லை. வரிச்சலுகையை பெரிய பட்ஜெட் படங்கள் அனு மதிபதை தவிர்க்கவே இது நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து தமிழ் நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் திருச்சி ஸ்ரீதர் கூறும் போது, கடந்த 1 1/2 மாதமாக கேளிக்கை வரி விலக்கு சான்றிதழ் அரசிடம் இருந்து பெறப்படவில்லை. எனவே வரியை நீடித்து அரசுக்கு செலுத்திக் கொண்டு இருக்கிறோம். இது விஷயமாக அரசின் தெளிவான முடிவை உத்தரவு மூலம் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அரசு எந்த முடிவு எடுத்தாலும் கட்டுப்படுவோம் என்றார்.