முதல்வர் கருணாநிதிக்காக திரையுலகம் எடுத்த பாராட்டுவிழாவில் கலந்துகொண்ட அஜித், முதல்வரை வைத்துக்கொண்டே ஒளிவு மறைவின்றி பேசினார்.
அப்படி பேசிய வார்த்தைகளும், அதனால் ஏற்பட்ட பிரச்சனைகளும் எளிதில் மறந்திருக்க வாய்ப்பில்லை.இப்படி யார் இழுத்த இழுப்பிற்கும் செல்லாமல் தானுண்டு தனது வேலையுண்டு என்று இருப்பவர் அஜித். சினிமா வட்டாரத்திலேயே இப்படி இருக்கும் அஜித் அரசியலிலா மூக்கை நுழைப்பார்? ஆனால் அவரது ரசிகர்கள் சிலரோ அவருக்கு எதிரான காரியமொன்றை செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்ட அஜித் ரசிகர் மன்றத்தின் மாவட்டசெயலாளர் ரெட் துரை, துணை செயலாளர் மதன்ஜி உள்ளிட்ட 500 அஜித் ரசிகர்கள் திமுகவிற்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். அமைச்சரும் பல்லாவரம் தொகுதி திமுக வேட்பாளருமான தா.மோ.அன்பரசனை அஜித் ரசிகர்கள் சந்தித்து திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாகவும், திமுக வெற்றிக்கா முழுமூச்சில் செயல்படுவதாகவும் தெரிவித்தனர். இது அவர்களது தனிப்பட்ட முடிவு என்றாலும் ரசிகர்மன்ற பெயரில் தங்களது ஆதரவை அவர்கள் தெரிவித்துள்ளது அஜித்திற்கு அதிருப்தியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.