இந்த படத்திற்கு முதலில் "தெய்வ மகன்" என்று பெயர் வைக்கப்பட்டது. சிவாஜி நடித்த படத்தின் தலைப்பு இது என்பதால் சிவாஜி பிலிம்ஸ் இந்த படத்தலைப்பை வைக்க அனுமதி மறுத்துவிட்டது. பின்னர் இந்தப்படத்திற்கு "தெய்வத்திருமகன்" என்று பெயர் வைக்கப்பட்டது. அந்த தலைப்பிற்கும் இப்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. "தெய்வத் திருமகன்" படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு தேவர் குல கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னையில் இன்று இந்த கூட்டமைப்பின் தலைவர் சண்முகையா பாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், நடிகர் விக்ரம் நடித்து வெளிவர உள்ள "தெய்வத் திருமகன்" தமிழ் திரைப்படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
|
|
தெய்வத் திருமகன் என்று மறைந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை மட்டுமே நாங்கள் அழைத்து வருகிறோம். இந்த நிலையில் அந்த பெயரில் திரைப்படம் வருவதை எங்கள் சமுதாய மக்கள் ஏற்க மாட்டார்கள். எனவே அந்த படத்தின் பெயரை மாற்றி வெளியிட வேண்டும். அவ்வாறு படத்தின் பெயரை மாற்றி வெளியிடாவிட்டால் தமிழகம் முழுவதும் அந்த படம் திரையிடப்படும் திரையரங்கங்களை முற்றுகையிடுவோம். திரைப்பட பிரதிகளையும் கைப்பற்றுவோம் என்று தெரிவித்தார். |