Thursday, April 21, 2011
ரோஜா செடிக்கு பக்கத்திலேயே மற்றுமொரு ரோஜா செடி வளர்ந்திருப்பதை போல வளர்ந்திருக்கிறார் கார்த்திகா. அம்மா ராதா ஒரு காலத்தில் தென்னிந்திய திரைப்படங்களில் முக்கியமான ஹீரோயின். மகளும் அவ்வாறு இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்புதானே? என் மகள் கோ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். நீங்கள்ளாம்தான் அவளை 'ப்ளஸ்' பண்ணனும் என்று பத்திரிகையாளர்கள் முன்பு ராதா வைத்த வேண்டுகோள் யூஷ§வலானது அல்ல என்பது மட்டும் நிஜம்!
நான் நடிக்க வரும்போது எந்தவித முன்னேற்பாடுகளும் இல்லாமல் அப்படியே வந்தேன். டைரக்டர் என்னை கூப்பிட்டு அனுப்பியதும் அப்படியே போய் கேமிரா முன்னாடி நின்னுட்டேன். ஆனால் கார்த்திகாவின் தலைமுறை அப்படியல்ல. மற்ற துறைகளில் பெண்கள் வேலை பார்ப்பது மாதிரி இதுவும் ஒரு துறை. அதற்காக அவங்க எடுத்துக்கிற பயிற்சிகள் இந்த புரபஷனை ரொம்ப ஈசியாக்குது என்று ராதா சில சம்பிரதாய அறிமுகங்கள் கொடுக்க, அடுத்து பேச வந்த கார்த்திகாவிடம் தலைமுறைக்கேற்ற கூர்மை இருந்தது.
அம்மா சில படங்களில் டூ பீஸ்ல நடிச்சிருக்காங்க. நீங்க அதுக்கு தயாரா இருக்கீங்களா என்ற கேள்வி நிச்சயம் தர்மசங்கடம் கொடுக்கும் என்றுதான் நினைத்திருப்பார்கள். ஆனால் வெகு இயல்பாக அந்த கேள்வியை எதிர்கொண்டார் கார்த்திகா. கதைக்கு அவசியம்னா நிச்சயம் செய்வேன். ஆனால் அதுக்கும் ஒரு லிமிட் இருக்கு. அது தாண்டாமல் பார்த்துக்கணும் என்றார். (நான் சிங்கிள் ஸ்விம்தான் போட்டேன் என்றார் பக்கத்திலிருந்த ராதா)
அடிப்படையில் நான் மலையாளி. ஆனால் தெலுங்கில்தான் அறிமுகம் ஆனேன். அந்த மொழி எனக்கு புதுசுங்கறதால தடுமாறினேன். மலையாளத்தில் நான் நடித்த படத்தில் சமஸ்கிருத மலையாளம் பேச வச்சுட்டாங்க. அதனால் அதுவும் கஷ்டமாகிருச்சு. கோ படத்தில் நான் பேசியிருக்கிற தமிழ் ரொம்ப ஈஸியாகவும் வசதியாகவும் இருந்திச்சு. அதனால் என் சாய்ஸ் தமிழ்தான்! எந்த லாங்குவேஜ் பிடிக்கும் என்று கேள்விக்கு கார்த்திகா சொன்ன பதில்தான் இது.
நாம சொல்லல... பொண்ணு ரொம்ப ஷார்ப்புன்னு!