Wednesday, May 04, 2011
பிரபு தேவா இயக்கத்தில் விஷால்- சமீரா ரெட்டி நடித்து வரும் படத்துக்கு 'பிரபாகரன்' என்று தலைப்பிட்டுள்ளனர். 'பிரபாகரன்' என்ற பெயரின் பிரபலத்தை சொல்லித் தெரியவேண்டியதில்லை. இந்தத் தலைப்பை தங்கள் கனவுப் படத்துக்கான தலைப்பாக நினைத்து அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளோரை ஒரு பட்டியலே போடலாம். பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி பிரகாஷ் ராஜ் நடிப்பில் உருவாகும் படத்துக்கு இந்தத் தலைப்புதான் சூட்டப்பட்டுள்ளதாக முன்பு கூறிவந்தனர். இன்னும் சிலரும் இந்தத் தலைப்பை பதிவு செய்துள்ளதாகக் கூறிவந்த நிலையில், பிரபுதேவா இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்துக்கு 'பிரபாகரன்' என தலைப்பிட்டுள்ளனர். ஆனால் பிரபாகரனுக்கும் இந்தப் படத்துக்கும் துளியும் சம்பந்தமில்லை. தெலுங்கில் கோபிசந்த் நடிப்பி்ல் வெளியான மசாலாப் படம் 'சௌர்யம்' படத்தைத்தான் தமிழில் விஷால் - சமீரா ஜோடியை வைத்து இயக்கி வருகிறார் பிரபு தேவா. இப்போது கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இந்தப் பெயருக்கு எதிர்ப்பு வரும் பட்சத்தில் 'பிரபா' என பெயரை சுருக்கவும் திட்டமிட்டுள்ளனராம். ஒரு மசாலா படத்துக்கு 'பிரபாகரன்' பெயரை வைப்பதா என தென்னிந்திய சினிமா வட்டாரங்களில் எதிர்ப்புகள் கிளம்பவும் வாய்ப்பிருக்கிறது. விஜயகாந்த் நடிப்பில் ஏற்கனவே 'கேப்டன் பிரபாகரன்' என்ற படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது நினைவிருக்கலாம்!! |