

கடந்த சில ஆண்டுகளாக தமிழ், மலையாளம் மற்றும் இந்தி, ஹாலிவுட் திரைப் படங்களின் படிப்பிடிப்பு புதுவையில் நடைபெற்று வருகிறது. பிரபல இந்தி நடிகர் அமீர்கான், நடிகை கரீனாகபூர் நடிக்கும் இந்தி படத்தின் படப்பிடிப்பு புதுவையில் நடைபெற்று வருகிறது. பாலிவுட்டை கலக்கிய ஹனிமூன் டிராவல் படத்தை இயக்கிய டைரக்டர் ரீமாஹக்டி இந்த படத்தை இயக்குகிறார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.
இந்த படத்தில் நடிகர் அமீர்கான் “கிரைம் பிராஞ்ச்” போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகைகள் கரீனாகபூர், ராணிமுகர்ஜி இருவரும் நடிக்கிறார்கள். புதுவை அண்ணாமலை ஓட்டலில் நடந்த படப்பிடிப்பில் அமீர்கான்-கரீனாகபூர் நடித்த காட்சிகள் படம் பிடிக்கப்பட்டது. படத்தின் 65 சதவீத படப்பிடிப்பு பணிகள் மும்பையில் முடிவடைந்த நிலையில் மீதி உள்ள பகுதிகள் புதுவை யில் படமாக்கப்பட்டு வருகின்றன.
புதுவையின் எழில் மிகுந்த பகுதிகளான ஊசுடு ஏரி, பிள்ள¬யார்குப்பம், புதுவை கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகிறது. அமீர்கான்-ராணி முகர்ஜி சம்பந்தப்பட்ட காட்சிகளை ஊசுடு ஏரி பகுதியிலும், புதுவை கடற்கரை சாலையில் ஒரு விபத்து காட்சியையும் படமாக்க படப்பிடிப்பு குழுவினர் திட்டமிட்டுள்ளனர். படப்பிடிப்பு புதுவையில் தொடர்ந்து 3 வாரம் நடத்த முடிவு செய்துள்ளனர்.