ஜீவாவையும், ஜெயம் ரவியையும் வைத்து தனித்தனியாக "ஈ", "பேராண்மை" என்ற இரண்டு வெற்றி படங்களை கொடுத்த டைரக்டர் ஜனநாதன், இப்போது இருவரையும் ஒன்றாக இணைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். சமீபகாலமாக இரண்டு, மூன்று நாயகர்கள் சேர்ந்து நடிக்கும் படங்கள், ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் இதுபோன்ற படங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியில் ஆரம்பித்த இந்த கான்செப்ட், இப்போது மலையாளம், தமிழ் படங்களிலும் தொற்றிக்கொண்டுள்ளது. மேலும் இதுபோன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெறுவதோடு, வசூலிலும் சாதனை படைக்கிறது. அந்தவகையில் கோ, அவன் இவன் போன்ற படங்களை தொடர்ந்து, ஜெயம் ரவி, ஜீவா இருவரையும் வைத்து ஜனநாதன் ஒரு படம் ஒன்றை இயக்க போகிறார்.
இதுகுறித்து டைரக்டர் ஜனநாதன் கூறியதாவது, ஏற்கனவே ஜீவாவை வைத்து "ஈ" படத்தையும், ரவியை வைத்து பேராண்மை படத்தையும் இயக்கியுள்ளேன். மீண்டும் இவர்கள் கூட்டணியில் தனித்தனியாக ஒரு படம் பண்ணலாம் என்று கூறியிருந்தேன். ஆனால் இப்போது இருவரையும் சேர்த்து ஒரு படத்தை இயக்கலாம் என்று எண்ணியுள்ளேன். எங்கள் மூவருக்கும் இடையே நல்ல புரிதல் இருப்பதால், எளிதாக வேலை செய்ய முடியும். ஜெயம் ரவியும், ஜீவாவும் இணையும் முதல் படம் இது. முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் நிறைந்த படமாக இருக்கும். கதையின் களம் தமிழ்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருப்பதால், இங்கேயும், வெளிநாட்டிலும் சூட்டிங்கை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். கதாநாயகியின் கதாபாத்திரம் கவர்ச்சியும், சண்டையும் கலந்து அமைந்திருக்கிறது. இதற்காக தமிழ் பேச தெரிந்த எந்த மாநில நடிகையாக இருந்தாலும், பொருத்தமாக தேர்ந்தெடுக்க இருக்கிறோம்.ஏற்கனே ஜீவாவின் "ஈ" மற்றும் "கோ" படங்கள் தெலுங்கிலும் வெற்றி பெற்றிருக்கிறது. அதேபோல் ஜெயம் ரவியின் "பேராண்மை" படமும் தெலுங்கில் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இருவருக்கும் தெலுங்கில் நல்ல வரவேற்பு இருப்பதால் இந்தபடத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் மாபெரும் பொருட்ச் செலவில் தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறோம் என்றார்.