Monday, 11 July 2011
ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா சிங்கப்பூர் பயணம்.
Monday, July 11, 2011
நடிகர் ரஜினிகாந்துக்கு கடந்த ஏப்ரல் மாதம் உடல்நல குறைவு ஏற்பட்டது. சென்னையில் இரண்டு முறை வெவ்வேறு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். நுரையீரல் நீர் கோர்ப்பு, சிறுநீரக பாதிப்பு மூச்சு திணறல் போன்ற பிரச்சினைகள் அவருக்கு இருந்தது. இதையடுத்து டயாலிசிஸ் சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
பின்னர் அவருக்கு உயர்ரக சிகிச்சை அளிப்பதற்காக சிங்கப்பூருக்கு குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். அங்குள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதையடுத்து உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. டயாலிசிஸ் சிகிச்சையும் நிறுத்தப்பட்டது. தற்போது பூரண குணமடைந்துள்ளார்.
சில நாட்கள் தினமும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அதுவரை சிங்கப்பூரிலேயே தங்கி இருக்கும்படியும் டாக்டர்கள் ஆலோசனை கூறினர். இதனால் அங்குள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் வீடு எடுத்து ரஜினி தங்கியுள்ளார்.
டாக்டர்கள் உடல் நிலையை அவ்வப்போது கண்காணித்து வந்தனர். தற்போது அவரது உடல்நிலை நூறு சதவீதம் குணமாகி விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். சென்னைக்கு திரும்பலாம் என்றும் அனுமதி அளித்துள்ளனர்.
இந்நிலையில் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இன்று சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். இதுகுறித்து அவருடைய கணவரும் ரஜினியின் மருமகனுமான நடிகர் தனுஷிடம் கேட்டபோது, 'ரஜினிகாந்த் உடல்நிலை முழுவதுமாக தேறிவிட்டது. அவர் விரைவில் சென்னை திரும்புவார். அவரை அழைத்து வருவதற்காகத்தான் என் மனைவி ஐஸ்வர்யா நேற்று சிங்கப்பூர் புறப்பட்டு போய் இருக்கிறார்' என்று தெரிவித்தார்.