"மெளனகுரு" படத்தின் மூலம் திறமையான நாயகன் என்ற பெயரை பெறுவேன், என்று கூறுகிறார் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரனும், நடிகருமான அருள்நிதி. "வம்சம்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி, "உதயன்" படத்தின் மூலம் நடிப்பை தொடர்ந்த அருள்நிதி, தற்போது "மெளனகுரு" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் சூட்டிங் கடந்த சில நாட்களாக மதுரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நடந்து வருகிறது. மவுனகுரு பற்றி அருள்நிதி அளித்துள்ள பேட்டியில், தனது எதிர்கால திட்டம் பற்றி கூறியிருக்கிறார்.
எம்.பி.ஏ. படித்துவிட்டு, மார்க்கெட்டிங் துறையில் இருந்தேன். மாடலிங்கும் செய்தேன். எனது தந்தை 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சினிமா தயாரிப்பாளராக உள்ளார். மாடலிங் துறையில் இருந்து சினிமாவிற்குள் நுழைந்தேன். எனது முதல்படமான "வம்சம்" ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. தற்போது ஓடிக்கொண்டிருக்கும் "உதயன்" படத்திற்கும் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. இதற்கு முன்பு மவுனம், குரு என்ற பெயர்களில் எடுத்த படங்கள் பெரும் வெற்றியை பெற்றுள்ளன. அதேபோல் எனது 3வது படமான இந்த "மெளனகுரு" சினிமாவும் வெற்றி பெறும். வம்சம் கிராமப்பாங்கினையும், உதயன் காதல் பாங்கினையும் வெளிப்படுத்தின. ஆனால் மெளனகுரு அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்டது. தனிமையை விரும்பும் ஒரு கல்லூரி மாணவனின் கதைதான் மவுனகுரு. வம்சம் சினிமாவில் அறிமுகமாகி, உதயன் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றேன். மவுனகுரு மூலம் திறமையான நாயகன் என்ற பெயரை பெறுவேன், என்று அருள்நிதி கூறினார்.இந்த படத்தை டைரக்டர் சாந்தகுமார் இயக்கி வருகிறார். டைரக்டர்கள் தரணி, சுசி கணேசனினம் உதவியாளராக இருந்து பயிற்சி பெற்றிருக்கும் இவர், மெளனகுரு படத்தின் சூட்டிங்கை, சென்னை, குற்றாலம், கேரளத்தின் வனப்பகுதிகள் மற்றும் நெல்லையில் நடத்தியிருக்கிறார். தற்போது மதுரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சூட்டிங்கை நடத்திக் கொண்டிருக்கிறார்.