Tuesday, April 19, 2011
உதயநிதி ஸ்டாலின் ஏற்பாடு செய்திருந்த மிகப் பெரிய திரைப்பட வெற்றி விழாவுக்குப் போகாமல் தவிர்த்துவிட்டார் ரஜினி என செய்திகள் வெளியாகிவுள்ளன. இது ரஜினி – திமுக இடையிலான விரிசலை மேலும் உறுதிப்படுத்தியிள்ளது.
ஏப்ரல் 13-ம் தேதிக்குப் பிறகு சர்ச்சை நாயகனாக மாறியிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
தேர்தலில் இவர் யாருக்கு வாக்களித்தார் என்ற ரகசியம் மீடியாக்களில் வெட்ட வெளிச்சமாகிவிட்டதால், திமுக தரப்பினரின் அதிருப்திக்கு ஆளாகியுள்ளார் ரஜினி. அவருக்கு பெருமளவு ரசிகர்கள் இருப்பதே திமுகவில்தான். 1996-க்குப் பிறகு, அதிமுக தொண்டர்களின் நம்பர் ஒன் எதிரிப் பட்டியலில் இருப்பவர் ரஜினி.
கருணாநிதி மட்டும் தலையிடாமல் போயிருந்தால் என்னுடைய சிவாஜி படமே வந்திருக்காது. அந்த அளவு சிக்கலில் இருந்தது, என்று சந்திரமுகி விழாவில் ரஜினியே கூறியது நினைவிருக்கலாம்.
இந்த அளவு திமுக தலைமைக்கும், ஆட்சிக்கும் நெருக்கமாக இருந்த ரஜினி திடீரென்று, எதிராகத் திரும்பிவிட்டாரே என்ற பேச்சுதான் வெளியில் எங்கும். குறிப்பாக திமுக தொண்டர்கள் மத்தியில். ரஜினி ரசிகர்கள் மத்தியிலும் இந்த விஷயம் மிகப்பெரிய உறுத்தலாக மாறியுள்ளது.
அன்னா ஹஸாரே இயக்கத்தில் சேரப்போவதாக அறிவித்துள்ள ரஜினி, ஜெயலலிதாவுக்கும் பா வளர்மதிக்கும் ஆதரவாகப் போய்விட்டாரோ என ஆதங்கத்தோடு கேட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், தொடர்ந்து தான் பங்கேற்பதாக உறுதியளித்திருந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்து வருகிறார் ரஜினி.
சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா நடித்துள்ள மாவீரன் படப் பாடல்களை சிரஞ்சீவி முன்னிலையில் ரஜினி வெளியிடுவதாக இருந்தது. ஆனால் நிலைமை இப்போது சரியில்லை. பின்னர் பார்க்கலாம் என ரஜினி கூறிவிட, அந்த நிகழ்ச்சியே கேன்சல்!
அடுத்து, முதல்வரின் பேரன் உதயநிதி ஸ்டாலினின் படங்களான விண்ணைத் தாண்டி வருவாயா, மைனா, மதராஸபட்டினம் மற்றும் பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகிய நான்கு படங்களின் வெற்றிவிழாவை பிரமாண்டமாக ஏற்பாடு செய்து வந்தார் உதயநிதி ஸ்டாலின். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவிருந்தவர் ரஜினி. ஆனால் இப்போது நிகழ்ச்சிக்கு வர இயலவில்லை என ரஜினி தரப்பில் கூறப்பட்டுள்ளதாம்.
இவை தவிர மேலும் சில நிகழ்ச்சிகளையும் கூட அவர் ஒத்திப் போட்டுள்ளாராம்.
ராணாவுக்காக ரஜினி தயாராவதால், எந்த விழாவில் பங்கேற்க இயலவில்லை என்று அவர் தரப்பில் விளக்கம் கூறப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.