உலகையே உற்றுப்பார்க்க வைத்திருக்கும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் சினிமாவாக உருவாகப் போகிறது. இதில் அரசியல் தரகர் நீரா ராடியாவாக நடிகை லட்சுமிராய் நடிக்கவுள்ளார். பொதுவாக இது போன்ற பரபரப்பான சம்பவங்கள் இந்தியில்தான் சினிமாவாக உருவாகும். 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தமிழ் தலைகள் பல உருண்டு கொண்டிருப்பதாலோ என்னவோ... தமிழ் சினிமா முந்திக் கொண்டது. டைரக்டர் ஜான் மனோகர் என்பவர் இயக்கும் இப்படத்துக்கு, "2ஜி ஸ்பெக்ட்ரம்" என்றே பெயர் சூட்டியிருக்கிறார்கள். ஈரோடு ரவிச்சந்திரன் தயாரிக்கிறார்.
"2ஜி ஸ்பெக்ட்ரம்" படம் குறித்து டைரக்டர் ஜான் மனோகர் அளித்துள்ள பேட்டியில், நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்த ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தை மையப்படுத்தி, நடந்த நிகழ்வுகள், அதன் பின்னணி போன்றவற்றை முழுமையாக சொல்ல இந்தப் படத்தை உருவாக்குகிறோம். லட்சுமி ராய், புதுமுகம் சாந்தினி, ரியாஸ்கான் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். படத்தில் லட்சுமிராய்க்கு முக்கியமான வேடம். அவர்தான் நீரா ராடியா வேடத்தில் நடிக்கப் போகிறார். மற்ற கேரக்டர்களில் யார் யாரை நடிக்க வைப்பது என்பது பற்றி யோசித்து வருகிறோம். விரைவில் நட்சத்திர பட்டியல் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரங்கள் வெளியிடப்படும், என்று கூறியுள்ளார்.