உச்சகட்டம் படத்தில் ஹீரோவாக நடித்து வருபவர் நடிகர் விக்னேஷ் (28). இந்த பட சூட்டிங்கின்போது ராதாகிருஷ்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், கோவையை சேர்ந்த ராதாகிருஷ்ணனின் நண்பர்கள் பழனிசாமி, கண்ணன் ஆகியோருக்கு அம்பத்தூரில் உள்ள ஒரு இடத்தை வாங்கி தர விக்னேஷ் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த நிலத்தை அவர் வாங்கி தராததால் அவர்கள் இது தொடர்பாக போலீசில் புகார் செய்தனர். சென்னை சிட்லபாக்கம் போலீசார் விக்னேசை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். இதையடுத்து வீட்டுக்குச் சென்ற விக்னேஷ் வயிற்றில் கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சிட்லபாக்கம் போலீசார் விக்னேஷ் மீது தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து நடிகர் விக்னேஷின் தாயார் வசந்த லட்சுமி கூறுகையில், என் மகன் வாங்கிய பணத்திற்கு ரூ.1 கோடி மதிப்புள்ள எங்கள் வீட்டை எழுதி வாங்கி விட்டனர். சில லட்சங்கள் தர வேண்டியதற்கு கோடி மதிப்புள்ள வீட்டை மிரட்டி வாங்கி கொண்டனர். போலீசார் இந்த செயலில் ஈடுபட்டனர். பணம் வாங்கி ஏமாற்றியதாக உன் தாயார் மீது வழக்கு போட்டு செய்தி வெளியிடுவோம் என என் மகனை மிரட்டியுள்ளனர். என் மகனுக்கு என் மேல் மிகவும் பாசம். அம்மாவை இதுபோல செய்து விடுவார்கள் என்ற பயத்திலும், சில லட்சம் வாங்கியதற்கு கோடி மதிப்புள்ள வீட்டை மிரட்டி எழுதி வாங்கி கொண்டதாலும் கத்தியால் குத்திக்கொண்டான். எங்களை ஏமாற்றிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறினார்.